Thursday 8 August 2013

வள்ளல் சடையப்ப கவுண்டர்


இறைவாழ்த்து:

எப்பணி செய்யும் போதும், எவ்வுணவுண்ணும் போதும்,
தர்ப்பணம் ஹோமம் தானம் தபஜபம் பண்ணும் போதும்
அப்பனே அவற்றையெல்லாம் அன்புடன் உன் தாளிணையில்
அர்ப்பணம் செய்யும் நீர்மை அடியனுக்கு அருள் செய்வாயே. ......

 வள்ளல் சடையப்ப கவுண்டர்

   நமது  கொடை வள்ளல் திரு சடையப்ப கவுண்டர் பிறந்த ஊர் விழுப்புரம் அருகேயுள்ள திருவெண்ணைநல்லூர். இவர் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாத் தந்தை குலத்தில் பிறந்த  சங்கரன் என்பவர்க்குப் புதல்வனென்றும், இணையாரமார்பன் என்பவனைத் தம்பியாக உடையவனென்றும் நம் வாலசுந்தரர் இயற்றிய கொங்கு சதகம் மூலம் தெளிவுபடுகிறது.

                இடுக்குவர் பிள்ளை தன்னை யிறங்கினும்
       இறக்கார் என்று
          வடித்தமிழ் நூலின் ஆசான் வாலசுந்
       தரன்யான் சொன்னேன்
          படிக்கவே பொருட்சாத் தந்தைப் பண்ணைகோன்
       வெண்ணை நல்லூர்
          கொடுத்திடும் இரணம் வாரிக் கொங்குசெய்
       சதகந் தானே.

 சாத்தந்தை கூட்டம், பண்ணைகோன் -பண்ணைகுலத்தவன், குலம் - சாதிப் பிரிவுகளின் தனித்தனிக் கூட்டம்.பண்ணைகுலம், பாலைகுலம் போல்வன குலப்பெயர்கள், பண்ணந்தை சாத்தந்தை போல்வன மரபுப்பெயர். 'சாத்தந்தை கோத்திரன் பண்ணை குபேந்திரன் தமிழ்ச்சடையன்' என கொங்கு சதகம் நூலில் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்



சடையன் மரபும் குலமும் வாழ்கென வாழ்த்தியது 

சாத்தந்தை கோத்திரன் பண்ணைகு லேந்திரன் தமிழ்ச்சடையன்
கோத்திரம் நாற்பத்தெண் ணாயிர மென்னுங் குலம்விளங்க
ஆத்திப நல்லூர் கலியுக மாயிர மைம்பத் தொன்றில்
வாழ்த்துவர் கங்கையின் வங்கிசத் தோர்கொங்கு மண்டலமே


சாத்தந்தை குலத்தைச் சேர்ந்த நம் தமிழ்ச்சடையன் – சடையப்ப கவுண்டரின் நற்குடி நாற்பத்தி எட்டாயிரமும் குலம் விளங்க அவர்களின் ஆதி காணியான் ஆத்திபநல்லூரில் கலியுகம் ஆயிரத்தி ஐம்பத்தொன்றில் கங்க குலத்தோர் வாழும் கொங்கு நாடே

 இவர் மாபெரும் நிலக்கிழார் என்றும் கொடையில் சிறந்து விளங்கினார் என்றும் கவிச்சக்கிரவர்த்தி கம்பர் புகழாதபாட்டில்லை.புலவர் ஒட்டகூத்தர், புலவர்புகழேந்தி, கம்பர் ஆகியோர் இவர் காலத்து புலவர்கள் என்று வரலாறு பல இடங்களில் கூறுகின்றது.

வள்ளலினவேறுபெயர்கள்:

'புதுச்சேரிக்கொடையன்' 'புதுவைச்சடையன்'  'புதுவைத்திரிகர்த்தன்' 'வெண்ணெய்த்திரிகர்த்தன்' போன்ற பெயர்களாலும் வழங்குதலுமுண்டு. இவர், மூவேந்தர்க்கும் அவர் பரிசனங்கட்கும் ஒரு காற்பெருவிருந்தளித்து, அவரால் திரிகர்த்தராயன் எனச் சிறப்புப் பெயர் சூட்டப் பெற்றார் என்பர். இவர் சோணாட்டில் மிகப் பெரிய காணி வளமுடையவராய் இருந்தாரெனவும், நாளும் பல்லாயிரவர்க்குப் பாலுஞ்சோறும் பரிந்தளித்தாரெனவும் வரலாறு கூறுகிறது
.

சோழமண்டல சதகப் பாடல்கள் :

அளிக்கும்படைமூ வேந்தருங்கொண் டாடும்விருந்தா லதிசயமாய்த்
திளிக்குந் திரிகர்த் தராயனெனச் செப்பும்வரிசைத் திறஞ்சேர்ந்தோன்
விளைக்குமரிசி மாற்றியநீர் வெள்ளங்கிழக்கு விளையுமென
வளைக்குப் பெருமைப் புதுவையர்கோன் வளஞ்சேர் சோழமண்டலமே.

எண்ணத்தகும்பா ருள்ளளவு மிரவிமதிய மெழுமளவும்
கண்ணிற்கினிய சயராம் கதையிலொருபான் கவிமுழுதுங்
வெண்ணெய்ச்சடையன் சடையனென விறலார்கம்பன் விளங்கவைத்த
வண்ணத்துரைவே ளான்பெருமான் வளஞ்சேர் சோழ மண்டலமே.

கம்பரை ஆதரித்தது:

     வள்ளல் சடையப்ப கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் குலோத்துங்க சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன் தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில்எழுத, மற்றப்புலவர்ஒட்டகூத்தர், புலவர் புகழேந்தி ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்று கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில்ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்றுகம்பர்கூறுவார்.

   சடையப்ப வள்ளலை கம்பன் பத்து பாடல்களுக்கு ஒரு முறை நினைவு கூறுகிறான் என்பது உலகறிந்த உண்மையே!

     நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ்போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன்வாசகர்களை கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப்புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான்.

கம்பராமாயணம்
  



     இனி கம்பர் தாம் பாடியருளிய இராமாவதாரத்துள் சடைய வள்ளலது பெருநன்றி பாராட்டி அவ்வள்ளலை ஆங்காங்கு ஒருபது கவிகளால் புகழ்ந்துள்ளனரென்பது,


பாடல்:
  

வாழ்வுஆர்தருவெண்ணெய்நல்லூர்ச்சடையப்பன்வாழ்த்துப்பெற
தாழ்வார்உயரபுலவோர்அகஇருள்தான்அகல
போழ்வார்கதிரின்உதித்ததெய்வப்புலமைக்கம்பநாட்டு
ஆழ்வார்பதத்தைச்சிந்திப்பவர்க்குயாதும்அரியதுஅன்றே

பொருள்:
      
           திருவெண்ணெய்நல்லூர் என்ற ஊர் வாழும்படி வாரி வழங்கிய சடையப்ப வள்ளல் பாடல் பெற்று உலக புகழ் பெற வேண்டும் என்பதால் கம்பராமாயணத்தில் அவரது பெயரை ஆங்காங்கே வைத்தவரும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் உயர உழைத்தவரும் புலவர்கள் தங்கள் தமிழ் பாடல்களில் சொல், பொருள், மற்றும் கவிவளம் செழிப்பெடுத்து ஓடாமல் இருள் படர்ந்து தடங்கல் ஏற்படுமாயின் எவரின் கவிதைகளை படித்து எவரின் பெருக்கெடுத்து ஓடும் தமிழை பருகி மீண்டும் புத்துணர்வு பெற்று எழுச்சி அடைந்து இருள்நீங்கி ஒளி பெருவரோ இருளை அழிக்கின்ற நீண்ட கதிர்களை உடைய சூரியனை போல உதித்த தெய்வீக புலமை பெற்ற, கம்ப நாட்டில் தோன்றிய கம்பநாடாரின் திருவடிகளை சிந்திப்பவர்க்கு எதுவும் அரியது, கடினமானது இல்லை!

பாடல்:

எண்ணிய சகாத்தம் எண்ணூற்றுஏழின்மேல் சடையன்வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராமகாதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னேகவி அரங்கேற்றினானே

பொருள்:

      எண்ணி அறியப்பட்ட சாலி வாகன சகாப்தம் எண்ணூற்று ஏழாம் ஆண்டிற்கு மேல், சடையப்ப வள்ளல் வாழ்ந்ததிரு வெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த கம்பன் தான் இயற்றிய இராமனது வரலாற்றை, பங்குனி மாதத்தில், உத்திரநட்சத்திரத்தில் பூமாலை அணிந்த திருவரங்கனுக்கு முன்னே புலவர்கள் கூடிய அவையிலே அனைவரும் ஏற்குமாறு அரங்கேற்றினான்.

பாடல்:

நடையின் நின்று உயர்நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறுமாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின்தந்ததே.

பொருள்:

       நல்லொழுக்கத்தில் நிலை பெற்று, உயர்வு பெற்ற இறைவனான திருமாலின் அவதாரங்களில் நடந்ததாகிய இராமாவதாரத்தைக் குறித்த பெருமை வாய்ந்த
செய்யுள்கள் நிறைந்ததாவும், குற்றங்கள் அறவே இல்லாததுவும் ஆன இந்த மாபெரும் காப்பியம் சடையப்ப வள்ளலின் ஊரான திருவெண்ணெய்நல்லூர் என்னும் இடத்தில் வைத்து இயற்றப்பட்டது

பாடல்:

நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன்கூற
ஆரணக் கவிதை செய்தான் அறிந்தவான்மீகி என்பான்
சீர்அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
கார்அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதைசெய்தான்

பொருள்:
        
       திருமாலின் அவதாரமான இராமனின் திருவிளையாடல்கள் அனைத்தும் நாரத முனிவன் கூற அதனைக்கேட்டு வால்மீகி என்னும் முனிவன் வேதத்துக்கு சமமான வடமொழிக் கவிதைகளாக இயற்றினான் பின்பு அதை சிறப்புப் பொருந்திய சோழநாட்டுத் திருவழுந்தூர் என்னும் ஊரில் வாழும்கம்பன் மழை மேகம் போல்சிறந்த கொடைசடையப்பரின் ஆதரவால் தமிழில் கவிதையாக எழுதினான்

பாடல்:

விண்ணவர் போயபின்றை, விரிந்த பூமழையினாலே
தண்எனும் கானம் நீங்கித், தாங்கரும் தவத்தின் மிக்கோன்
மண்ணவர் வறுமைநோய்க்கு, மருந்து அனசடையன் ,வெண்ணெய்
அண்ணல் தன்சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே;
(பாலகாண்டம், வேள்விப்படலம்)

பொருள்:

* மக்களின் வறுமை நோய் தீர
* கம்பனின் வெறுமை நோய் தீர
எப்படிச் சடையன் மருந்து என்னும் அடைக்கலம் கொடுப்பானோஅப்படி, மருந்துபோல, இராகவனுக்குப் படைக்கலம் கிட்டிற்று!

பாடல்:

வண்ண மாலைக்கைபரப்பி, உலகை வளைந்த இருள்எல்லாம்
உண்ண எண்ணித்தண்மதியத்து, உதயத்து எழுந்த நிலாக்கற்றை;
விண்ணும் மண்ணும்திசை அனைத்தும், விழுங்கிக் கொண்ட, விரிநல்நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன், புகழ்போல் எங்கும்பரந்து உளதால்!
(க்ஷெ மிதிலைகாண்படலம். 74.)

பொருள்:

       இருட்டையெல்லாம், தன்கையைப் பரப்பி, நிலா உண்கிறது!  எதைப்போல்?
உலகப் புகழையெல்லாம் உண்ணும் சடையன் புகழ்போல், பரவி நிற்கிறது நிலா!

பாடல்:

மஞ்சினில் திகழ் தருமலையை, மாக் குரங்கு
எஞ்சுறக் கடிது எடுத்துஎறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன்; சடையன் வெண்ணெயில்
தஞ்சம்! ‘என்றோர்களைத் தாங்கும் தன்மை போல்

பொருள்:

.பல குரங்குகள், கல்லைத்  தொம்தொமென்று கொண்டு வந்து  போட, அதை மூழ்காமல் தாங்கி, ஒழுங்கில் அமைக்கிறான் நளன் என்னும் பொறியாளன்! எதைப்போல்? பல துன்பங்களையும் கொண்டாந்து போட்டாலும், தஞ்சம் என்பாரைத் தாங்கும் சடையன் போல்!

பாடல்:

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச
விரை செறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மௌலி

பொருள்:

 அரியணையை அனுமன் தாங்கி பிடிக்க, அங்கதன் வாள் பிடித்திருக்க, பரதன் வெண்குடை பிடித்திருக்க ,பக்கத்தில் இருவர் சாமரம் வீச வள்ளல் திரு சடையப்ப கவுண்டரின் முன்னோரான வேளாளர் முடியை எடுத்து தர குலகுரு வசிஷ்டர் ராமருக்கு முடி சூட்டினார் இந்த வரியால், தன் ஆருயிர் நண்பன் சடையனை மட்டுமல்லாதுஒரு பரம்பரையையே கரை சேர்த்து விட்டான் கம்பன்!

கம்பருக்கு அடிமை:

 கம்பர் சடையனையும், அவன் மரபினோரையும் உயர்த்திப் பாடிய
செய்தியொன்று இந்நூலில் வரும் 'பார்த்திபன் கங்கையில்' என்னும்
தலைப்புடைய செய்யுளிலிருந்து தெரிகின்றது.

     அவ்வரலாறு :- குளித்தலையில் சேர, சோழ, பாண்டியமன்னர்களும்,
வேளாளர்களும் பார்த்திபகங்கை யென்னுமிடத்தில் கூடியிருந்தனர். காவிரி
பெருக்கெடுத்து வந்தது. அப்பொழுது குலோத்துங்க சோழன் தனக்குரிய
காவிரியின் பிரவாகத்தைப் புகழ்ந்து கூறினான். சோழனுடைய
இறுமாப்பையறிந்த கம்பர், 'இக்காவிரி நீர் சடையன் மரபினராகிய வேளாளர்
வீட்டு விருந்தினர்கள் விருந்துண்டு கை கழுவும் எச்சில் நீர்" என்னும்
பொருளமைந்த வெண்பாவொன்றைப் பாடினர். அதனைக் கேட்ட சோழன்
கம்பர் மீது சினங்கொண்டான். அப்பொழுதே கம்பர் காவிரியில் சோற்றுப்
பருக்கையுடன் மேலே மிதந்து வரும் வாழையிலைகளைக் காட்டித் தான்
கூறியதனை மெய்ப்பித்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த வேளாளர்கள்
தம்புகழை உயர்த்திக்கூறி மெய்ப்பித்த தெய்வப் புலவராகிய கம்பரை
வியந்து பாராட்டியதுடன் அக்காலத்து முறைப்படி மாத்தெளித்துச் சத்தியம்
செய்து கம்பருக்கு அடிமையுமாயினர். இவ்வரலாற்றைக் கம்பர் பாடிய
'
திருக்கை வழக்கம்' அறிவிக்கின்றது.


"மெய்கழுவி வந்து விருந்துண்டு மீளுமவர்
கைகழுவு நீர்போகுங் காவிரியே - பொய்கழுவும்
 போர்வேற் சடையன் புகழ்மரபி னோர்பெருமை
 யார்கூற வல்லா ரறிந்து"

"நாவிற்புகழ்கம்ப நாடற்கடிமையென்றே
 
மாவைக்கரைத்து முன்னே வைக்குங்கை"
-திருக்கைவழக்கம்